சென்னையில் பரிசோதனை முயற்சி..
விரைவு அஞ்சல்கள் அனுப்பிய நாளிலேயே பட்டுவாடா...
சென்னை: விரைவு அஞ்சல்கள் பதிவு செய்த நாளிலேயே பட்டுவாடா செய்யும் வசதி பரிசோதனை முயற்சியாக சென்னையில் 66 அஞ்சலகங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறை தலைவர் மூர்த்தி தெரிவித்தார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி: உலக அஞ்சல் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட நாளான அக்.9ம் தேதி 1974ம் ஆண்டு முதல் உலக அஞ்சல் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய அஞ்சல் துறை சார்பில் அக்.9ம் தேதி முதல் அக்.15ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. 9ம் தேதி உலக அஞ்சல் நாளாகவும், 10ம் தேதி சேமிப்பு வங்கி நாளாகவும், 11ம் தேதி கடிதங்கள் நாளாகவும், 13ம் தேதி அஞ்சல்தலைகள் சேமிப்பு நாளாகவும், 14ம் தேதி வணிக வளர்ச்சி நாளாகவும், 15ம் தேதி அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. சேமிப்பு நாள் கடைபிடிக்கப்படும் அக்.11ம் தேதி உலக பெண் குழந்தைகள் நாள் என்பதால் அன்று பள்ளிச்சிறுமிகள் அதிகளவில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அக்.13ம் தேதி மாற்றுத்திறன், ஆதரவற்ற மாணவர்கள் சுமார் 30 பேருக்கு அவர்கள் படத்துடன் அஞ்சல் தலை தயாரித்து தரப்படும்.
வணிக வளர்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படும் அக்.14ம் தேதி முதல் சன் டைரக்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை அஞ்சலகங்களில் செலுத்தலாம். மேலும் அக்.16ம் தேதி முதல் மீண்டும் கிஷான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் விற்பனை செய்யப்படும். அதேபோல் பரிசோதனை முயற்சியாக விரைவு அஞ்சல்கள் பதிவு செய்யும் அதே நாளில் பட்டுவாடா செய்யும் வசதியை சென்னையில் உள்ள 64 அஞ்சலகங்களில் அறிமுகப்படுத்துகிறோம். ஆனால் விரைவு அஞ்சல்களை பகல் 11.30 மணிக்குள் பதிவு செய்து விட வேண்டும். இதற்கு கிடைக்கும் வரவேற்பு, சேவையில் உள்ள சாத்தியங்களின் அடிப்படையில் மற்ற அஞ்சலகங்களிலும் இந்த வசதியை விரிவுபடுத்த உள்ளோம்.
தமிழகத்தில் 94 தலைமை அஞ்சலகங்கள், 2506 துணை அஞ்சலகங்கள், 9288 சிற்றூர் அஞ்சலகங்கள் இருக்கின்றன. இவற்றில் சிற்றூர் அஞ்சலகங்கள் தவிர மீதி 2600 அஞ்சலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 மாதங்களில் 2000 சிற்றூர் அஞ்சலகங்கள் கணினிமயமாக்கப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள 63 தலைமை அஞ்சல் அலுவலகங்கள் உட்பட 176 அஞ்சலகங்கள் வங்கி சேவை தருவதற்கு ஏற்ப இணையச்சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஏடிஎம் மையங்களும் திறக்கப்படும். இவ்வாறு மூர்த்தி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது இயக்குனர்கள் கோவிந்தராஜ ராமலிங்கம், வெங்கடேஸ்வரலு ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment